குருணாகல், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில வைத்து, சிவிலியன் ஒருவர் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் தர கட்டளை அதிகாரி ஒருவர் அவரை காலால் உதைத்து தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் உள்ளக மட்டத்திலான உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
குருணாகல், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவரே இராணுவ அதிகாரியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவத்தின் தகவல்கள் பிரகாரம், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே எரிபொருளை பெற்றுக் கொள்ள ஒன்று கூடியவர்களிடையே அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த தலையீடு செய்த இராணுவத்தினரை அங்கிருந்தவர்கள் மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டியதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்.
இதன்போது இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவரே, இராணுவத்தின் கைதில் இருக்கும்போது இராணுவத்தினர் அவரை பிடித்திருக்க, திடீரென வரும் இராணுவ கட்டளை தர அதிகாரி ஒருவர் காலால் உதைத்து தாக்குவது காணொளிகளில் பதிவாகியுள்ளது.