Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது – ஜனாதிபதி

 

போராட்டக் குழுவினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்.

நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றிபெறுவதற்கு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

இந்தநிலையில் ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது

பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அந்த குழுவில் அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவினரையும், செயற்பாட்டாளர்களையும் சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போராட்டக் குழுவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தமைஇ தங்களது தலைமுறையின் தனிச்சிறப்பு என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும், அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »