Our Feeds


Thursday, August 18, 2022

ShortTalk

கபூரிய்யா அரபுக் கல்லூரியையும், அதன் சொத்துக்களையும் பாதுகாப்பது நமது கடமை - கபூரிய்யா கல்லூரியின் முக்கிய கூட்டத்தில் ஹக்கீம் பேச்சு



மஹரகம, கபூரிய்யா அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் தனவந்தர்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட பல சொத்துக்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டெடுப்பது நமது கடமை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். 


கொழும்பு, மஹரகமவில் அமைந்துள்ள முஸ்லிம்களின் பழைமையான அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கபூரிய்யா அரபுக் கல்லூரியையும் அதன் சொத்துக்களையும் கபூரிய்யா கல்லூரியின் உருவாக்குனர் அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் 4ம் தலைமுறை வாரிசுகள் அபகரிக்க முயல்வதாகவும் அதனை பாதுகாத்து சமூகத்திற்கு பயணளிக்கும் வகையில் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் கோரி கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் நேற்றைய தினம் கொழும்பில் நடத்தப்பட்ட கபூரிய்யா பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஹக்கீம் மேற்கண்டவாரு தெரிவித்தார்.


கபூரிய்யா அரபுக் கல்லூரி என்பது இலங்கையின் புகழ் பெற்ற வர்த்தகரான அல்ஹாஜ் N.T.H அப்துல் கபூர் அவர்களினால் 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். 


சுமார் 17.50 ஏக்கர் காணியுடன் கூடிய குறித்த அரபுக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே கொழும்பு, கிரேன்ட்பாஸ் பகுதியில் சுலைமான் தனியார் மருத்துவமனை அமைந்திருந்த காணியையும் அவர் வக்பு - இறைவனுக்கான பணிக்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


பெரும் பாரம்பரியம் கொண்ட குறித்த கல்லூரியை அதன் தற்போதைய நம்பிக்கை பொறுப்பாளர்கள் திட்டமிட்டு அபகரிக்க முயல்வதாகவும், அதற்கெதிராக பழைய மாணவர்கள் சங்கம் தொடர்ந்தும் போராடி வருவதாகவும் கல்லூரியை மீட்டெடுக்க முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில், கல்லூரியை மீட்டெடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் தாம் முழு மனதுடன் ஒத்துழைப்பதாக நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீனும் வாக்குறுதி அளித்ததுடன், கல்லூரி மீட்டெடுப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்குமாறு நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறித்த குழுவும் அமைக்கப்பட்டது.


நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அஸாத் சாலி முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம் அமீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப் மற்றும் என்.எம் ஷஹீத் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »