Our Feeds


Wednesday, August 3, 2022

ShortTalk

இலங்கை வரும் சீனாவின் உளவுக் கப்பல்! - இந்நேரத்தில் இந்தியாவை சீனா ஆத்திரமூட்டுவது ஏன்? - சிறப்புக் கட்டுரை!



ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின் “பெரியண்ணா” என்றழைப்பார்கள்.


​பெரியண்ணாவின் உதவிகளை குறைத்து மதிப்பிடமுடியாது. சுனாமி அனர்த்தத்தின் போது பெரும் சேவைகளை ஆற்றியிருந்தது. உதவிகளையும் செய்திருந்தது. அதன்பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் வியப்படைய செய்யும் வகையில் உதவிகளைச் செய்திருந்தது.


கொரோனா வைரஸின் தாக்கம் தங்களுடைய நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருந்த நிலையிலும் “அயலுறவுக்கு முதலிடம்” என்ற​அடிப்படையில், மருந்துவ உதவிகளையும் ஏனைய உதவிகளையும் செய்தது. இந்தியாவின் மருத்துவ உதவிகளால், கொரோனாவில் இருந்து ஓரளவுக்கு எம்மால் தலைத்தூக்க முடிந்தது என்பதையும் மறந்துவிடக்கூடாது.


இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.32,000 கோடி உதவி வழங்கியுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டு அரசாங்கமும் ​அரிசி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பிவைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.


இவையெல்லாம் எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இன்றி​யே இந்தியா செய்தது. அதற்கு பின்னரான அபிவிருத்தி ஒப்பந்தங்களுக்கு இலங்கையில் இருக்கும் சில இனவாத சக்திகள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இந்தியாவின் ஒரு பிராந்தியமாக, இலங்கையை கைப்பற்ற முயற்சிக்கிறது என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தனர்.


இந்நிலையில்தான், இந்தியாவை சீண்டிப்பார்க்கும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் சீன உளவுக்கப்பல் இலங்கைக்கு ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று வருகைதரவுள்ளது. அந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரையிலும் நங்கூரமிட்டிருக்கும்.


சீனாவின் உளவுக்கப்பல் நாட்டுக்குள் உள்நுழைவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அனுமதி கிடைத்துள்ளது என இலங்கை கடற்படையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஓகஸ்ட் 2 ஆம் திகதியன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, “எரிபொருள் நிரப்புவதற்காக சீன கப்பல் தரித்து நிற்கும்” என்றார்.


இலங்கை அரசின் இந்த தடுமாற்றத்திலிருந்தே சீனக் கப்பலின் வருகை இந்தியாவுக்கு ஆபத்தானது என்பதை உணரலாம்.


சீன கப்பலை அல்ல, சீனாவின் உளவுக்கப்பலை அல்லது சீனாவின் கண்காணிப்பு கப்பலை நாட்டுக்குள் அனுமதித்திருப்பதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான புதிய அரசாங்கம் பல்வேறான நெருக்கடிக்குள் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அது இலங்கை- இந்திய இராஜதந்திர உறவுகளில் கீறலை ஏற்படுத்தவும் கூடும் என்பதில் ஐயமில்லை.


சீன உளவுக்கப்பலின் வருகையை, இந்தியாவின் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும், சீன கப்பலின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


அவர்கள் மட்டுமன்றி, இலங்கையில் இருக்கும் தமிழ்க் கட்சிகளும் அரசாங்கத்துக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை, சீன உளவுக்கப்பலின் வருகை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது. என்பதுடன் அதற்காக இராஜதந்திர ரீதியில் தீர்மானங்களை எட்டவேண்டுமென தமிழ்கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் ஓகஸ்ட் 11-ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து  என்றும் அதனை இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றே தமிழக தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.   


சீன உளவுக் கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்  


சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13ஆம் திகதி புறப்பட்ட யுவான் வாங் கப்பல் தாய்வானைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது.


சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். 750 கிலோமீற்றர் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு.


அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பல் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும்.


அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


இந்தியாவை உளவு பார்க்க சீனா துடிப்பதும், அதற்கு இலங்கை உதவுவதும் இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு ஒக்டோபர் 31-ஆம் திகதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர்மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து 5 நாட்கள் இந்திய நிலைகளை உளவு பார்க்க முயன்றன.


இலங்கைக்கு கொடுத்த கடனை காரணம் காட்டி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் வளைத்து விட்ட சீனா, அங்கிருந்தும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.


2021 டிசெம்பர் மாதத்தில் இலங்கைக்கான சீனத் தூதர் சென்ஹாங், யாழ்ப்பாணத்திற்கு சென்று, அங்கிருந்து படகு மூலம் இராமேஸ்வரத்தை ஒட்டிய இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை பயணித்து, இந்தியாவை உளவு பார்ப்பதற்கான உத்திகளை வகுத்துச் சென்றிருந்தார்.


அப்போதே சீனாவின் இத்தகைய சதித்திட்டங்களை சுட்டிக்காட்டி, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. சீனாவின் முந்தைய சதித் திட்டங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.


சீன உளவுக் கப்பலின் வருகையை தொடக்கத்தில் மறைத்த இலங்கை அரசு, பின்னர் உண்மை அம்பலமான பிறகுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனச் சதிகளுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக துணைபோகின்றனர் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம்.


சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது.


சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.


இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சதீவு உள்ளிட்ட ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, ஒரு நாளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை.


இவ்வளவுக்குப் பிறகும், இந்தியாவுக்கு எதிராக, சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது.


வடக்கில் லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


இலங்கை என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கான கேடயமாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இந்தியா மீதான தாக்குதலுக்கான தளமாக மாறிவிடக் கூடாது. இதை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தான் இந்தியா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11-ஆம் திகதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எத்தகைய கடினமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு மத்திய அரசு தயங்கக் கூடாது” என்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர்.


இந்நிலையில்,  சீனாவின் உளவு கப்பல் வருவதை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில் மத்திய அரசு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.


இலங்கையில் அரசியல், பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசியல் பதற்றங்களைத் தணிக்கவும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் சீனா மட்டும் இலங்கையின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு உளவு  கப்பலை ஆகஸ்ட் 11-ந் திகதிதி அனுப்புகிறது.   


ஏற்கெனவே சீனாவின் உளவு கப்பல் வருகையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? இதனை இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க்கும். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது.


இதனை அந்த நாடுகள் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தலாக அமையுமா, அல்லது இந்திய பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக அமையுமா? என்பதை மிகவும் உண்ணிப்பாக இந்த நாடுகள் கவனித்து வருகின்றது. இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


 இலங்கையில் ஏற்பட்டுள்ள கருமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டே ஓடிவிட்டார். இந்த நிலையில் இலங்கைக்கு ஏற்கெனவே கடன் மேல் கடன் கொடுத்து இங்குள்ள ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கின்ற சீனா இங்கிருந்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.


 இது பற்றி இலங்கை இராணுவம் அளித்துள்ள விளக்கத்தில் மற்ற நாடுகளின் வர்த்தக இராணுவ கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது போலவே சீன கப்பலுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது.


இந்தியா தனது பாதுகாப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த சம்பவத்தையும் கவனமாக கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்கிறது  என தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  இந்தியா கண்காணிப்புடன் இருக்கிறது என்றார்.


 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் கப்பலுக்கு அனுமதியளிக்குமாறு இலங்கையைச் சீனா அச்சுறுத்த முயலுகிறது. அத்துடன் இந்தியாவை சீனா ஆத்திரமூட்ட முயற்சிகிறது என்பது மட்டுமே உண்மை.


சீனாவின் உளவுக்கப்பல் வருகையானது. இலங்கை- இந்திய உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். அத்துடன், இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவிகளுக்கு என்ன நடக்கும்?, சீனாவின் உளவுக்கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தன் ஊடாக, இந்திய-இலங்கை இராஜதந்திர உறவுகளின் எதிர்க்காலம் குறித்தும் சிந்திக்கவேண்டும்.


இலங்கைக்கு- இந்தியா செய்துவரும் உதவிகளை தடுக்கும் வகையிலும், கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கியிருக்கும் கடன்களில் இருந்து மீளவேண்டுமாயின் உளவுக்கப்பலுக்கும் அனுமதியளிக்கவேண்டுமென சீனா, இலங்கையின் கழுத்தை நெறித்து இருக்கலாம்.


இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் இத்துறைமுகத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சீனாவின் நகர்வானது ஒப்பந்தத்தின் மீறலாகும்.


நன்றி: தமிழ் மிரர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »