(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக மீண்டுமொரு மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அரசாங்கத்துக்கு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை கிடையாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போன்று போலி நாடகமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஒருபுறம் சர்வகட்சி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுபுறம் இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதே , தற்போது பொலிஸாரின் பிரதான கடமையாகவுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு போலியாக , சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
