Our Feeds


Tuesday, August 9, 2022

ShortTalk

இலஞ்ச ஊழல் வழக்கு: ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு குற்றப் பத்திரிகை கையளிப்பு!



(எம்.எப்.எம்.பஸீர்)


ச.தொ.ச. ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப் பத்திரிகை கையளித்தது.


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் ச.தொ.ச. செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட மொஹமட் சாகீர் ஆகியோருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் இந்த குற்றப் பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட குறித்த  மூவருக்கும் எதிராக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  கடந்த மே 30 ஆம் திகதி  ஐந்து வழக்குகளை தாக்கல் செய்தது.

குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், பிரதிவாதிகள் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்த நீதிமன்றம் வழக்கு முடியும் வரை மூவரினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ததுடன், கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்க  உத்தரவிட்டது.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் 9.00 மணிக்கும்  நண்பகல் 12.00 மணிக்கும் இடையே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

பின்னர் இவ்வழக்கின் விசாரணைகளுக்கு முன்னரான ஒன்று கூடலுக்காக, வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »