Our Feeds


Friday, September 16, 2022

SHAHNI RAMEES

கல்முனையில் 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

 

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு  எதிர்வரும்  23ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு  இன்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 


அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்   வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில்  13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய  விஹாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்,  கைதான சந்தேக நபரை இன்று (16) ஆம் திகதி வரை  3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (16) இவ்வழக்கு மீண்டும்  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினர் சார்பாக  ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள்  ஆராயப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கை இதுவரை  மன்றுக்கு கிடைக்கப்பெறாமை சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை  ஆகியவற்றை  கருத்திற் கொண்டு    சந்தேக நபரான தேரரின்  பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில்  மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »