Our Feeds


Thursday, September 15, 2022

ShortTalk

மாதவிடாய் கால செனிடரி நப்கின் விலை உயர்வு: பாடசாலை மாணவிகளின் வரவில் வீழ்ச்சியாம்!



ஆரோக்கிய துவாய்களின் (செனிடரி நப்கின்) அதிக விலையேற்றம் காரணமாக , பாடசாலை மாணவியர், பல்கலைக்கழக மாணவியர், ஆசிரியைகள், அரச தனியார் துறை ஊழியர்கள் மாதவிடாய் காலப் பகுதியில் வீட்டிலிருந்து வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு தூண்டப்பட்டு வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ஆசிரியர் தொழிற் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் விசேட ஊடக சந்திப்பை நடத்திய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

‘ வயதுக்கு வந்த மாணவிகள், மாதவிடாய் காலப்பகுதியில் பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பது அவதானிக்கப்பட்டு வருகிறது. விசேடமாக கிராம புற மாணவியர்கள் இவ்வாறு பாடசாலை செல்வதை தவிர்ப்பதில் அதிகரிப்பை காண முடிகிறது. சுகாதார துறைக்கு பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கும் சூழலில் இந்த நிலைமை கவலைக்குரியதாகும்.

ஆரோக்கிய துவாய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில், மாணவிகள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவிகள், அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் பெண் ஊழியர்கள் என அனைவரும் மாதவிடாய் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு உத்தேசிக்கும் வீதம் அதிகரித்துள்ளது.’ என வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »