Our Feeds


Sunday, September 11, 2022

SHAHNI RAMEES

பொலிஸாரா குற்றவாளிகளா ஜெயிப்பது? ஒரு கை பார்ப்போம் என்கிறார் DIG அஜித் ரோஹண..!

 

தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கொலைகளுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டதாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், 6 வாரங்களுக்குள் அனைத்து சம்பவங்களுடனும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து காட்டுவதாகவும், பொலிஸாரா குற்றவாளிகளா என ஒரு கை பார்த்து விடலாம் எனவும் அவர் சவால் விடுத்தார்.

156 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகளாக காலி – கோட்டையில் நடந்த விசேட கொண்டாட்ட நிகழ்வின் போதே  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ கடந்த ஜூன் முதலாம்  திகதி முதல் தென் மாகாணத்தில் இதுவரை துப்பாக்கிதாரிகளால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இவற்றில் 4 சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை நிறைவு செய்யப்பட்டு சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அதேபோல் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கிகள், பிரவுனின் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏனைய சம்பவங்களின் சந்தேக நபர்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம்.  அந்த, சந்தேக நபர்கள், அந்தக் கொலைக்காரர்கள், ஆயுதத்தை கையிலெடுத்தவர்கள் ,

குற்றத்தின் பின்னர் மறைந்திருக்க அல்லது சுதந்திரமாக இருக்க முடியும் என நினைப்பார்களாயின், அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு ஞாபகபப்டுத்த விரும்புகிறேன்.

இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  எமக்கு வழங்கப்பட்டுள்ள சவாலை நாம் ஏற்கிறோம். பார்க்கலாம் யார் சவாலில் ஜெயிக்கிறார்ரகாள் என்று. நாமா அல்லது குற்றவாளிகளா என இன்னும் 6 வாரங்களில் விடை தெரிந்துவிடும்.

ஒரு போதும் ஆயுதங்களுடன் நடமாட நாம் அனுமதிக்கப் போவதில்லை.  அனைவரையும் அடையாளம் கண்டுள்ளோம்.  உதவியவர்கள், மறைமுகமாக உதவியவர்கள், எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கலில் இருந்து அனைவரையும் கண்டுபிடித்துவிட்டோம்.’ என தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »