Our Feeds


Wednesday, October 5, 2022

SHAHNI RAMEES

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறைவு..!

 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ காரணமானவர்களைத் தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவுசெய்த உயர்நீதிமன்றம், எழுத்துமூல சமர்பிப்புகளை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, இரு தரப்பினருக்கும் இன்று (05) உத்தரவிட்டது.

அதற்கமைய, இந்த மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிய காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.


அதன்போது, மனுதாரர் மற்றும் பிரதிவாதி தரப்பினர் முன்வைத்த வாதங்களை நிறைவு செய்யப்பட்டதையடுத்து, மூன்று வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு இரு தரப்புகளுக்கும் அமர்வு உத்தரவிட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த மனுக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி அறிவித்திருந்ததுடன், எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்குகள் தொடரும் எனவும் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் தொடர்பில் அரசியலமைப்பின் 12(1) சரத்தின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு உயர்நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி அனுமதி வழங்கியது.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட 13 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமானவர்களைத் தண்டிக்க உத்தரவிடுமாறும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »