இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிடியாணைபிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையைான சட்டத்தரணி, பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, விண்ணப்பங்கள் தொடர்பில் அழைப்பாணை பெறவில்லை என நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை, பதிவுத் தபாலில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் உபுல் ஜயசூரிய பிசி மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.
நீதித்துறையை குறிவைத்து அண்மையில் வெளியிட்ட அவமதிப்புக் கருத்து தொடர்பில் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுவதற்காக நேரில் முன்னிலையாகுமாறு இராஜாங்க அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக அழைப்பாணை அனுப்பியிருந்தது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான இலங்கை நீதிச் சேவை சங்கம் (JSASL) மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, கடும் எச்சரிக்கையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுவிக்கப்பட்டார்.