Our Feeds


Wednesday, October 5, 2022

ShortTalk

தெற்காசிய நாடுகளின் விஞ்ஞான மாநாட்டில் முதலிடம் பெற்ற இலங்கை வைத்தியர் மொஹமட் ரிஷாட்!



-அஸீம் ரம்ளான்


இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேற்று மருத்துவர்கள் சங்கத்தின் 2022 இற்கான வருடாந்த விஞ்ஞான மாநாடு கடந்த செப்டம்பர் இறுதியில் கொழும்பு, ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.


இவ்வருடம் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளுக்கான மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல் கூட்டமைப்பு (SAFOG) சார்பில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பல விஷேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் மத்தியில் மருத்துவ விஞ்ஞான ஆய்வு போட்டியொன்று நடத்தப்பட்டதுடன், போட்டிக்காக குறித்த வைத்தியர்கள் தங்கள் மருத்துவ ஆய்வுகளை விளக்கி, முடிவுகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த ஆய்வு போட்டியில் இலங்கையினை சேர்ந்த விஷேட மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஷாட் முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த முன்மொழிவு மற்றும் சிறந்த ஆய்வுக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் 45 வயதிற்குட்பட்ட இளம் மகப்பேற்று வைத்திய நிபுணர்களுக்கான குழுச்செயற்திட்டத்திலும் ‘கார்டியோடோக்ராபி’ தொடர்பில் தனது குழு ஆய்வினை சமர்ப்பித்து அதிலும் முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்டதுடன் ‘பேராசிரியர் சபாரட்ணம் அருள்குமரன்’ விருதும் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உலக மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சபாரட்ணம் அருள்குமரனின் அனுசரணையுடன், இலங்கை மகப்பேற்று மருத்துவர்கள் சங்கத்தினால் இந்த விஞ்ஞான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இம்மாநாட்டில் முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் நிபுணர் மொஹமட் ரிஷாட் தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருவதுடன் கொழும்பு தேசிய வைத்திசாலை மற்றும் டீ சொய்சா மகளிர் மருத்துவமனை ஆகியவற்றிலும் மருத்துவ நிபுணராகவும் செயற்பட்டு வருகின்றார்.

நாட்டிற்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் மகத்தான சேவை செய்ய முற்படும் மருத்துவர்களுக்கும், எதிர்கால மருத்துவர்களாக மிளிரவிருக்கும் மருத்துவபீட மாணவர்களுக்கும் வைத்தியர் மொஹமட் ரிஷாட் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »