Our Feeds


Monday, October 17, 2022

ShortTalk

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம்: சாட்சி விசாரணைகளுக்காக மேலதிக கிட்டிய திகதிகளை கோரி சட்ட மா அதிபருக்கு கடிதம்..!



பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

உள்ளிட்ட இருவருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள 78/21 எனும் வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளுக்கு கிட்டிய திகதிகளை கோரி சட்ட மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணியான, ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ரதிஸ்ஸவின் கையெழுத்துடன், சனத் விஜேவர்தன சட்ட நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ளது.


ஏற்கனவே கடந்த ஜூன் 10 மற்றும் ஆகஸ்ட் 22,23 ஆம் திகதிகலில் குறித்த மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில், சி.ஐ.டி. மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் காரணங்களுக்காக விசாரணைகள் நடைபெறவில்லை. இதே நிலை கடந்த 4 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் தொடர்ந்தது. இவ்வாறான நிலையிலேயே நவம்பர் 25 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டது.


இந்நிலையில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் அட்டத்தின் 21 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ, இந்த மேலதிக வழக்கு விசாரணை திகதிகளை கோரி கடிதம் அனுப்பியுள்ளார். தனது சேவை பெறுநருக்கு எதிராக சிஐடியினர் சோடிக்கப்பட்ட விடயங்களை மையப்படுத்தியே நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதன்படி நவம்பர் 25 ஆம் திகதிக்கு மேலதிகமக, நீதிமன்ற விடுமுறைக்கு முன்னர் டிசம்பர் மாதத்திலும் அதன் பின்னர் இரு வழக்குத் திகதிகளை எதிர்வரும் 2023 ஜனவரி மாதத்திலும் மேலும் இரு திகதிகளை பெப்ரவரி மாதத்திலும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ கோரியுள்ளார்.


முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற்பொழிவை நடத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »