Our Feeds


Monday, October 10, 2022

SHAHNI RAMEES

களுத்துறை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய என மஹிந்த கூறியது தொடர்பில் டிலான் பெரேரா வெளியிட்ட கருத்து..!



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை கடந்த மே மாதம்

9 ஆம் திகதி தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்.


மே 09 ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தால் நாட்டின் வன்முறை தோற்றம் பெற்றிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மே மாதம் 9ஆம் திகதியன்று காலை அல்லது அதற்கு முன்னர் பதவி விலகியிருந்தால் நாட்டில் வன்முறை தீவிரமடைந்து பேரழிவு ஏற்பட்டிருக்காது, அரசியலில் அவரும் கௌரவமாக இருந்திருப்பார்.


மே மாதம் 09 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறிக்கொண்டு ஒருசிலர் அலரிமாளிகையில் கூட்டத்தை நடத்தினர்.காலி முகத்தில் போராட்டகளத்தின் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு அங்கு உத்வேகம் வழங்கப்பட்டது.


களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி கோட்டயபய ராஜபக்க்ஷவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார், அதன்போது அருகில் இருந்தவர் தற்போது ரணில் என குறிப்பிட்டதன் பின்னரே அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் உரையாற்றினார் எனவும் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »