Our Feeds


Wednesday, October 5, 2022

SHAHNI RAMEES

முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

 

முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிக்கான மய்யம் மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை செவ்வாய்க்கிழமை செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டினை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜிப்ரியா இர்ஷாத் ஆகியோர் செய்துள்ளனர்.


இது குறித்து நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 2021.12.15 ஆம் திகதி கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட பணிப்புரைக்கு அமைய தரம் 06, 07,10,11 ஆகிய தரங்களுக்கான இஸ்லாம் பாட புத்தங்கங்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதோடு ஏற்கனவே மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்த குறித்த தரங்களுக்கான புத்தகங்களும் மாணவர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டது.

குறித்த இச்செயற்பாடு இடம்பெற்று இதுவரை சுமார் 10 (பத்து) மாதங்கள் கடந்தும், ஆணையாளர் வாக்குறுதி அளித்ததற்கிணங்க இதுவரையில் புதிய இஸ்லாம் பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பாரிய சவால்களை எதிர்நோக்குவதோடு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதிலும் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.


குறித்த தரங்களுக்கான இஸ்லாம் பாட புத்தக பதிப்பாசிரியர் குழு, எழுத்தாளர்கள் குழு, கண்காணிப்பு குழு என எந்தவொரு குழுவிடமும் எந்த அறிவிப்போ, கருத்துக்களோ, ஆலோசனையோ பெறப்படாமல் திடீரென இப்பணிப்புரை கல்வி வெளியீட்டு ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது. வேறு நோக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட இப்பணிப்புரையானது சட்ட விரோதமானது.

இவ்விடயமானது முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை, மத சுதந்திரத்தை மீறுவதாக நீதிக்கான மய்யம் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மேற்படி முறைப்பாட்டில் நீதிக்கான மய்யம் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையினை மீளப்பெற ஆலோசனை வழங்குமாறும் புத்தங்கங்களை உடனடியாக மீள விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையகத்திடம் கோரியுள்ளது எனத் தெரிவித்தார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »