Our Feeds


Saturday, November 26, 2022

News Editor

நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவியை மறக்க முடியாது - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்


 

மனிதாபிமான நடவடிக்கை உட்பட மிக நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவிகளை இலங்கை ஒருபோதும் மறக்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான 50 வருட இணைப்பை குறிக்கும் வகையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா இலங்கையின் மிக முக்கிய பங்காளிகளில் ஒன்றாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளிற்கும் இடையிலான சுமூகமான உறவின் வாய்ப்புகளை இது கோடிட்டு காட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இது பாதுகாப்பு பொருளாதாரம் கலாச்சாரம் வர்த்தகம் ஆகியவற்றில் இலங்கையின் நிலையை வலுப்படுத்த உதவுகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வரலாறு முழுவதும் இரு நாடுகளும் பாதுகாப்பு உறவுகளை பேணியுள்ளன உயர்மட்டத்தில் இருந்து உருவாகும் தொடர்ச்சியான தொடர்புகள் மூலம் ஒருவருக்கொருவர் உதவ உறுதிபூண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இந்தியா வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே இந்தியாவின் அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் திறன் மேம்பாட்டு முயற்சிகளிற்கு உதவுவது குறித்து இந்தியா உறுதிபூண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படையினருக்கு இடையிலான பயிற்சி நடவடிக்கைகள் சகோதரத்துவம் மற்றும் ஒருவருக்கொருவர் இணைந்து இயங்ககூடிய தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்ற இலங்கையர்கள் பலர் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பில் மிகஉயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர் இது இருநாடுகளிற்கும் இடையிலான வலுவான உறவுகளை வளர்த்தெடுக்கவேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு இராஜதந்திரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ள கோபால் பாக்லே நாங்கள் உறவுகளை உருவாக்குபவர்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான பாலங்களை கட்டியெழுப்புபவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »