Our Feeds


Friday, November 25, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: ரிச்சர்லிசனின் அபார கோல்களுடன் சேர்பியாவை வீழ்த்தியது பிரேஸில்.!

 

சேர்பியாவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுக வீரர் ரிச்சர்லிசன் போட்ட அசத்தலான கோல் உட்பட 2 கோல்களின் உதவியுடன் பிரேஸில் வெற்றியீட்டியது.

ஆனால், அப் போட்டியின்போது நட்சத்திர வீரர் நேமார் உபாதைக்குள்ளானது பிரேஸிலுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.



ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் அப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடமுடியாமல் தடுமாறியபோதிலும் இரண்டாவது பகுதியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் கழக முன்கள வீரர் ரிச்சர்லிசன் 62ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் முன்னிலை அடைந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் வினிசியஸ் ஜுனியர் கோலை நொக்கி உதைத்த பந்தை சேர்பிய கோல்காப்பாளர் மிலின்கோவிச் சாவிச் தடுத்தபோது முன்னோக்கிவந்த 'ரீபவுண்ட்' பந்தை ரிச்சர்லிசன் கோலாக்கினார்.



11 நிமிடங்கள் கழித்து அவர் போட்ட இரண்டாவது கோல் இந்த வருட உலகக் கிண்ணத்தில் போடப்பட்ட அற்புதமான கோலாக பதிவானது. சேர்பிய கோல் வாயிலை நோக்கி வினிசியஸ் பரிமாறிய ஆள் உயர பந்தை 'சிசர்' கிக் மூலம் ரிச்சர்லிசன் கோலாக்கி அசத்தினார்.

1998இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் நோர்வேயிடம் அடைந்த தோல்வியின் பின்னர் நான்கு அத்தியாயங்களில் முதல் சுற்றில் தோல்வி அடையாமல் இருந்த பிரேஸில், இந்த வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை 6ஆவது தடவையாக வென்றெடுப்பதற்கான தனது முயற்சியை ஆரம்பித்துள்ளது.



வேகம், விவேகம் மற்றும் அற்புதமான பந்துபரிமாற்றங்களுடன் விளையாடிய பிரேஸில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. சேர்பியாவின் சாதுரியமான தடுத்தாடும் வியூகமே அதன் முயற்சிகளை தடுத்த வண்ணம் இருந்தது.

ரஷ்யாவில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்டபோதும் இதே கோல் எண்ணிக்கையில் பிரேஸில் வெற்றிபெற்றிருந்தது.



நேற்றைய போட்டியில் நேமார், ரிச்சர்லிசன், ரஃபின்ஹா, வினிசியஸ், லூக்கஸ் பக்கேட்டா ஆகியோர் அதிவேக நகர்வுகளுடனான பந்து பரிமாற்றங்கள் மூலம் சேர்பியாவை திக்குமுக்காட வைத்தனர்.

பிரேஸில் சார்பாக அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் 77 கோல்களுடன் முதலிடத்தல் இருக்கும் பேலேயின் சாதனையை சமப்படுத்த நேமாருக்கு 2 கோல்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தப் போட்டியை எதிர்கொண்டார்.



ஆனால், உலகின் மிகவும் விலையுயர்ந்த வீரரான நேமாருக்கு அந்த சாதனையை சமப்படுத்த மேலும் காத்திருக்க நேரிட்டுள்ளது.

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் வலது கணுக்காலில் உபாதைக்குள்ளான நேமார் கடுமையான வலியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவரது கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அவரது நிலை குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களின் பின்னரே அறியக்கூடியதாக இருக்கும் என வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.



பிரேஸில் - சேர்பியா போட்டியுடன் முதல் சுற்றின் முதலாம் கட்டப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளதுடன் இன்றிலிருந்து அடுத்த நான்கு தினங்களுக்கு இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.



ஜீ குழுவில் பிரேஸிலும் சுவிட்சர்லாந்தும் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் பிரேஸில் முதல் இடத்தில் இருக்கிறது.



பிரேஸில் அதன் இரண்டாவது போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்வரும் 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »