மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிரு;தி சபைகளை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இன்றைய தினம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (நவ.30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக இன்றைய தினம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மாகாண சபைக்குள் மாவட்ட அபிவிருத்தி குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தயார் என்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
அதனை விடுத்து, மாகாண சபைகளை கலைத்து, அதற்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நிறைவேற்று தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு அரசாங்கம், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளுக்கு இடையில் சரியான தொடர்புகள் காணப்படுவதற்கான மேடையாகவே, மாவட்ட அபிவிருத்தி குழுக்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
மாவட்ட அபிவிருத்தி சபை என்றால் என்ன?
1980ம் ஆண்டு காலப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட சபைகளை அறிமுகப்படுத்தியது.
இது இனப் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி என அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக்கொண்டது.
அதன்பின்னர், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அந்த அமைப்புக்கள் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிர்ப்பை வெளியிட்டன.
இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், இதற்கு அப்போது எதிர்ப்பை வெளியிட்டது.
1981ஆம் ஆண்டு மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இந்த நிலையில், ஜுன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.