Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் 3வது முறையாகவும் விசாரணை! - விசாரணையின் தற்போதைய நிலை என்ன ?
(எம்.எப்.எம்.பஸீர்)


பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இரு முக்கிய  சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக  அறிய முடிகின்றது.

இந் நிலையில் தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம்  விசாரணையாளர்கள் 3வது தடவையாகவும் அவரது வீட்டில் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.   

அத்துடன் சனிக்கிழமை (டிச. 24) ஆரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று,  இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்   ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும்நிலையில், 16 வங்கிக் கணக்குகள் தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இந்த 16 வங்கிக் கணக்குகள் இருவருக்கு சொந்தமானவை எனக் கூறும் விசாரணையாளர்கள், கொடுக்கல் வாங்கல், வர்த்தக நடவடிக்கைகளின்  பிரச்சினைகள், கொலைக்கு காரணமாக இருப்பின் அது குறித்த தடயங்கள் கிடைக்கலாம் என்ற ரீதியில் இந்த வழங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்து வருகின்றனர்.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைளுக்கு சொந்தக் காரராவார்.

பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

இந் நிலையில், ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார் இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன், சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதனைவிட தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஷாப்டரின் கொலையை, பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் பிரயன் தோமஸ் மீது சுமத்த  கடும் பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் சி.ஐ.டி. அதிகாரிகள் அவதானித்துள்ள நிலையில்,  சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய உறுதியான சான்றுகளை வெளிப்படுத்திக்கொள்ள விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை நடந்த தினம், ஷாப்டர் இருக்கும் இடத்தை, தொலைபேசியின் சிறப்பு செயலி ஊடாக அறிந்ததாக மனைவி குறிப்பிட்டுள்ள நிலையில், அடிக்கடி அவ்வாறு குறித்த செயலியை பயன்படுத்தி  இருக்குமிடம் அடையாளம் காணப்பட்டதாக மேலோட்டமாக தெரியவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். 

இந்நிலையில்,  அவ்வாறு இதற்கு முன்னரும் நிழ்ந்துள்ளதா என்பதை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளவும்  ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ளவும்  சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன்  ஏற்கனவே கையேற்கப்பட்டுள்ள  3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பிடு செய்து  பகுப்பாய்வு  செய்யப்பட்டு வருகின்றது.

 அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைது செய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »