Our Feeds


Monday, December 12, 2022

ShortTalk

போதைக்கு எதிராக காத்தான்குடி அக்ஸா பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!



போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி மையவாடியில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறித்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03.12.2022 அன்று புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய புதிய தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன், அதன் விளைவுகளும் மிக மோசமாக காணப்படுவதன் காரணமாக எதிர்வரும் 2023 ஜனவரி 1ம் திகதியில் இருந்து சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

1. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.

2. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.

3. போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்.

4. போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.

5. போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

6. போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் கூறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »