Our Feeds


Wednesday, December 14, 2022

ShortTalk

இலங்கையின் தேசிய மலர் அல்லியா ? நீலோற்பலமா ? சர்ச்சை குறித்து விசாரிக்க விசேட குழு அமைத்தார் அமைச்சர் நசீர் அஹமட்



இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா அல்லது நீலோற்பலமா (நில் மானல்) என்பது தொடர்பில் நிலவும் சர்ச்சைகளை பரிசீலித்து பரிந்துரைகளை முன்வைக்க விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.


முத்திரைப் பணியகம் நீலோற்பலம் மலருக்கு பதிலாக தவறாக அல்லி மலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளிலும்,உயர்கல்வி நிறுவனங்களிலும் பாடப்புத்தகங்களில் உள்ள தவறான மலரின் படத்தை காட்டி கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா அல்லது நீலோற்பலமா (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைப்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழு குழுக் கூட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய மலர் குறித்த விடயம் தொட்பில் பல ஆண்டுகாலமாக தீர்மானம் எடுக்கப்படாத சர்ச்சை தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கபில யகந்தாவல ஆகியோர்  இந்த கலந்துரையாடலின் போதுn நீண்ட விளக்கமளித்தனர்.

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இலங்கையின் தேசிய மலர் தொடர்பான அறிவிப்பு வெளியானது.இதற்கமைய தேசிய மலர் நீலோற்பலம்(நில் மானல்) என்பது உத்தியோகப்பூர்வமாக அமைச்சரவை பத்திரம் ஊடாக அறிவிக்கப்பட்டது.இருப்பினும் நீலோற்பலத்தை சித்தரிக்கும் விதத்தில் ஊதா நிறம் சார்ந்த அல்லி மலரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இது உண்மையான நீலோற்பலம் இல்லை என பேராசிரியர் யகந்தலாவ கருத்துக்களை முன்வைத்தார்.

1986 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த தவறு 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர்,சுற்றாடல் துறை செயலாளர் ஆகியோருக்கும் உயிர்பல்வகைமை செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2015ஆம் ஆண்டு தேசிய மலர் குறித்த சரியான படம் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் சரியான மலரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்த போதும் இலங்கையின் தேசிய மலரின் சிங்களப் பெயர் மானல் மலர்  (அல்லி மலர்) என்றும்,ஆங்கில மொழியில் புளு வோட்டர் லில்லி என்றும்,தமிழ் மொழியில் நீலோற்பலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் தேர்ச்சிப் பெற்ற பேராசிரியர் விமல் ஜீ.பலகல்லவின் நிலைப்பாட்டுக்கு அமையவே நீலோற்பலம் (நில் மானல்) என்ற பெயருக்கு பதிலாக தேசிய மலராக மானல் (அல்லி) எனப் பெயரிடப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள்.

அவரது கருத்துப்படி அல்லி என்பது உன்னதமான நீல மலர் என்பதால் தேசிய மலரின் சிங்களப் பெயரை மானெல் (அல்லி) எனப் பயப்டுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.தாவர வகைப்பாட்டின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளின்படி அறிவியல் பெயர் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம. ஆனால் நீண்ட வரலாற்றைக் கொண்ட சாதாரண மக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர்களை மாற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

அல்லி என்பது பொதுவான பெயர், இலங்கையில் ஊதா நிற அல்லி, வெள்ளை நிற அல்லி என பலவகையான அல்லிகள் இருப்பதால், இலங்கையில் தேசிய மலராக நிலோற்பல மலரை தெரிவு செய்ய வேண்டும் என ஒருசில பேராசிரியர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

1986 ஆம் ஆண்டு தேசிய மலரைத் தெரிவு செய்த குழுவினால் பரிசீலிக்கப்பட்ட அளவுகோல்களான பூர்வீகம் மற்றும் தனித்தன்மை, பயன்பாடு, வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம்,தோற்றம் மற்றும் விரிவாக்கம் என்பவற்றுடன், மேலதிக அளவு கோள்களான நிறம் மற்றும் வடிவம்,இனப்பெருக்கம் மற்றும் பிறிதொரு நாட்டின் தேசிய மலராக இல்லாமை போன்ற அடிப்படைகளையும் பூர்த்தி செய்யும் மலராக நீலோற்பலம் காணப்பட்டதாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

முத்திரைப் பணியகம் நீலோற்பலம் மலருக்கு பதிலாக தவறாக அல்லி மலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக பேராசிரியர் தீப்தி யகந்தாவல குறிப்பிட்டார்.பாடப் புத்தகங்களில் தவறான மலரின் படம் இருப்பதாகவும் பாடசாலைகளில் மாத்திரமன்நி சில உயர்கல்வி நிறுவனங்களிலும் தவறான மலரின் படத்தை காட்டி கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் காணப்படும் சர்ச்சை தொடர்பில் பரிசீலித்து பரிந்துரைகளை வழங்க பிரதமரினால் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் குறிப்பிட்டார். இவ்விடயம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஆகவே விரைவான மற்றும் உறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »