Our Feeds


Saturday, December 24, 2022

ShortTalk

ஆறாயிரம் கோடி ரூபாய் அபராதமாக செலுத்த இருக்கும் ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?




கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் பிரச்னைக்கு 725 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து பிரச்னையை முடித்துக் கொள்ள முன் வந்திருக்கிறது facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா.


அமெரிக்காவின் டேட்டா பிரைவசி வழக்கு வரலாற்றிலேயே, இப்படிப்பட்ட வழக்கைத் தீர்த்துக் கொள்ள ஒரு நிறுவனம் செலவழிக்கும் மிகப்பெரிய தொகை என வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.


கடந்த வியாழக்கிழமை 725 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வழக்கைத் தீர்த்துக் கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதை சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஃபெடரல் நீதிபதி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் கொடுக்க வேண்டி இருப்பதாக பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு குறித்த விசாரணை, 2023 மார்ச் 2ஆம் தேதியன்று பட்டியலிடப்பட்டுள்ளது.


மெட்டா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் சொந்தத் தரவுகளை அந்நிறுவனத்தைச் சேராத மற்ற வெளி நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி வழங்குவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.

இப்போது வரை மெட்டா நிறுவனம் தங்கள் தரப்பில் எந்த ஒரு தவறும் இல்லை என்கிற தொனியிலேயே வாதிடுகிறார்கள். மெட்டா நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியுரிமை குறித்த விஷயங்களில் பல முன்னேற்றங்கள் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எங்கள் சமூகம் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவரின் நலன் கருதி, 725 மில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து வழக்கைத் தீர்த்துக் கொள்ள முன்வந்திருப்பதாக மெட்டா நிறுவன தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மெட்டா நிறுவனத்துக்கு இதெல்லாம் பெரிய தொகை இல்லை.


மாதச் சம்பளம் வாங்கும் வெகுஜன மக்களில் ஒருவராக 725 மில்லியன் அமெரிக்க டாலர் என்று பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய தொகையாகத் தெரியலாம்.

ஆனால் ஃபேஸ்புக் போன்ற பிரம்மாண்டமான தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 725 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது மிக மிகச் சிறிய தொகையை என்கிறார் ஜேம்ஸ் பால் என்கிற தொழில்நுட்ப செய்தியாளர்.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மெட்டா நிறுவனம் தன்னுடைய புதிய முயற்சியான மெடாவெர்ஸுக்கு செலவழித்த மொத்த தொகையில் பத்தில் ஒரு பங்கு தான் இந்த 725 மில்லியன் அமெரிக்க டாலர் என்றால் மெட்டா நிறுவனத்திடம் இருக்கும் பணத்தை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த தொகை, மெட்டா நிறுவனத்தின் நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிற போதும், தரவுகள் தனியுரிமை குறித்த விஷயத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதற்கு நிறுவனம் கணிசமான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை இது மற்ற நிறுவனங்களுக்கு பளிச்சென உணர்த்தும்.

நிலவும் குழப்பம்.


லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் அனுமதி இன்றி, பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் அல்லாத வேறு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

250 முதல் 280 மில்லியன் மக்கள் இதில் அடங்கலாம் என பிபிசி வலைதள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 725 மில்லியன் அமெரிக்க டாலரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை இத்தனை கோடி பயனர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தெளிவான விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

அப்படியே இந்த 250 முதல் 280 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் 725 மில்லியன் அமெரிக்க டாலரை சராசரியாக பங்கிட்டு கொண்டாலும் ஒருவருக்கு சுமார் இரண்டு முதல் மூன்று டாலர் மட்டுமே கிடைக்கும்.

பின்னணி என்ன?


கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரைவசி ஊழல். ஃபேஸ்புக் பயனர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் அல்லாத மற்ற நிறுவன செயலிகளால் பயன்படுத்தப்பட்டது என்பதன் அடிப்படையிலேயே இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் ஆலோசனை நிறுவனமாக செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அன்லெடிக்கா, அமெரிக்காவில் உள்ள பல கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகளை ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெற்றது. அதைப் பயன்படுத்தி வாக்காளர்களை குறித்த விவரங்களை சேகரித்து இலக்கு வைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டதாக கூறப்பட்டது.


நன்றி : newssense

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »