Our Feeds


Thursday, December 15, 2022

News Editor

உணவு பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிவோம்


 

முதலில் உணவு பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிந்து, ஆலோசனைகளுக்கேற்ப இதற்கான தீர்வகளைக் கண்டு, படிப்படியாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, விவசாயமும் பின்னடைவைக் கண்டுள்ளது. அதேபோன்று 2023இல் உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவிருப்பதாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவு விலை அதிகரிக்கும் என்பதால் அனைத்து மக்களாலும் உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இது எமது நாட்டுக்கு மட்டும் உரித்தான விடயமல்ல. ஐரோப்பாவிலும் இந்நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது.இதற்கு முகம் கொடுப்பதற்கு ஏதுவாகவே உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

உணவைப் பாதுகாப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்திலுள்ள எமது முதலாவது இலக்கு ஆகும். உணவைப் பாதுகாப்பதன் மூலம் எமது மக்களை பசியிலிருந்து நாம் பாதுகாக்க முடியும்.  

கிராம மட்டத்தில் உணவைப் பெற்றுக்கொடுக்க உள்ளோம். நகரங்களிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.  சில கிராமங்களில், சிறு நகரங்களில், கொழும்பு போன்ற நகர்புறங்களில் உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அடிப்படை மட்டங்களில்  ஐந்து உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரதேச செயலகத்தில் பெருமளவிலான உத்தியோகத்தர்களும் இணைப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக திணைக்களங்களில் புறம்பானதொரு அதிகாரிகள் குழுவும் பணியாற்றி வருகின்றது.

 உற்பத்தியை பெறுவது மட்டும் போதாது. உணவை விலங்குகளிடமிருந்து மட்டுமன்றி வீண்விரயமாதலில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்த்தாக அதனை முறையாக களஞ்சியப்படுத்த வேண்டும்.

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை உரிய விலையில் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற முறையான பொறிமுறைக்கூடாக நாம் இவற்றைச் செயற்படுத்த வேண்டும். இவற்றை செயற்படுத்திக் கொண்டு செல்லும் வழியில் நாம் மேலும் பல புதிய முறைமைகளை இதில் இணைத்துக் கொள்ளலாம்.

இது தொடர்பில் மீளாய்வு செய்து அது தொடர்பில் தேவையானவற்றையும் ஆலோசனைகளையும் மத்திய அரசாங்கத்துக்குப் பெற்றுத் தாருங்கள். அப்போது இணைப்புக் குழு என்ற அடிப்படையில் தேசிய மட்டத்திலான தீர்மானங்களை எம்மால் முன்னெடுக்க முடியும்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »