Our Feeds


Wednesday, December 28, 2022

ShortTalk

வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது - ஹரீஸ் எம்.பி



முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது. 


13ஐ முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று பேசும் விடயம், கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக மாறியிருக்கும் தறுவாயில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகள், சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகள் உரத்துப்பேச தயங்குவதேன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.


வைத்தியர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பரின் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு டார்க் பௌண்டேஷன் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் கல்விக்கரம் 2022/23 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியலிலும், கல்வித்துறையிலும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமூகம் இருந்தபோது கிழக்கை வடக்குடன் இணைத்ததன் விளைவு, சொத்தழிவுகள், உயிரழிவுகள், இடம்பெயர்வுகள், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்ட துன்பியல் வரலாறுகளை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்கவில்லை என்பதால் 2023 ஆம் ஆண்டிலும் நாங்கள் விழிப்பாக இருந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் வெறுமனே வந்த ஒன்றல்ல. கல்வி புரட்சியினால் வந்த சிந்தனை அது. கிழக்கில் உருவாக்கப்பட்ட கல்வியியலாளர்களினால் உருவாக்கப்பட்ட சிந்தனை அது. எங்களை யாரும் இனிமேலும் அடிமைப்படுத்த முடியாது.

எங்களின் அண்டை நாடாக இருக்கட்டும் அல்லது அரசியல் பெரும் முதலை நாடுகளாக இருக்கட்டும் அல்லது அரசியல் பதவிகள் சலுகைகளுக்காக கூனிக்குறுகி நின்றவர்களாக இருக்கட்டும் இவர்களெல்லாம் சேர்ந்து வடக்கு, கிழக்கை இணைத்த சம்பவம் 2023 இல் முஸ்லிம்களின் அபிலாசைகளை பங்கம் விளைவிக்க கிழக்கு மக்கள் விட மாட்டார்கள். கிழக்கில் கல்விச்சமூகம் விழிப்பாக இருந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »