மற்றவர்களின் வங்கி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி சுமார் 28 இலட்சம் ரூபா பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சந்தேகநபர், இணையத்தின் ஊடாக கணினி தொழில்நுட்ப அறிவைப் பெற்றுள்ளார்.
சிறிய கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி தரவுகளை 'ஹேக்' செய்ய முயற்சித்துள்ளமையும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.