உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் நேற்று (21.01.2023) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.
பதுளை மாநகரசபை, பண்டாரவளை மாநகரசபை, ஹப்புத்தளை நகரசபை உட்பட பதுளை மாவட்டத்தில் 18 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றுக்கு போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 154 பேரும், சுயாதீனக்குழுக்களின் சார்பில் 30 பேரும் கட்டுப்பணம் செலுத்தினர். 163 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 152 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.
ஹாலிஎல பிரதேச சபைக்காக இ.தொ.கா தாக்கல் செய்த வேட்பு மனுவும், ஊவா பரணகம பிரதேச சபைக்காக எக்சத் மஹாஜன பக்சய தாக்கல் செய்த வேட்புமனும் நிராகரிக்கப்பட்டன.
அத்துடன், எல்ல பிரதேச சபைக்காக சுயாதீன அணியொன்று தாக்கல் செய்த வேட்பு மனுவும், ஹப்புத்தளை பிரதேச சபைக்காக இ.தொ.கா தாக்கல் செய்த வேட்பு மனுவும், சுயாதீன அணியொன்றின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஹல்துமுல்ல பிரதேச சபைக்காக ஐக்கிய தேசியக்கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி மற்றும் சுயாதீன அணியொன்று தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மஹியங்களை பிரதேச சபைக்காக ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுயாதீன அணியொன்று தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
(எஸ்.கணேசன்)