Our Feeds


Wednesday, January 25, 2023

ShortTalk

சட்டத்தரணிகளுக்கு எதிராக வழக்கு : B அறிக்கையை வாபஸ் பெற்றது பொலிஸ்!



(எம்.எப்.எம்.பஸீர்)


பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவுக்கு தெரியாமல்,  சட்டத்தரனிகள் சிலருக்கு எதிராக, கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல்ச் செய்த முதல் தகவல் அறிக்கையை ( பீ அறிக்கை), பொலிஸார் நேற்று (24) வாபஸ் பெற்றனர்.

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தொடர்புபட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கை, கொழும்பு மேலதிக நீதிவான் தரங்கா மஹவத்தவிடம் இருந்து மாற்ற சட்ட மா அதிபர் எடுத்த நடவடிக்கை மற்றும் வழி முறைக்கு எதிர்ப்பு வெளியிட்டு சட்டத்தரணிகள் கடந்த 18 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந் நிலையில், இது தொடர்பில்  உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் தேசிய சாலைகள் சட்டத்தின் கீழ் வாழைத்தோட்டம் பொலிசார், கொழும்பு பிரதான நீதிவானுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,  நுவன் போப்பகே, சேனக பெரேரா உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிட்டு பீ அறிக்கை  தாக்கல் செய்துள்ளனர்.

எனினும் இவ்வாறு சட்டத்தரணிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் சட்டப் பிரிவோ அறிந்திருக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் விளக்கம் கோரப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு  இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் அறிக்கையை மீளப் பெறுவதற்கு அனுமதி கோருவதாக வாழைத்தோட்டம் பொலிஸார், மன்றுக்கு தெரிவித்தனர்.

அதற்கு அனுமதியளித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸினால் இந்த வழக்கு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »