Our Feeds


Tuesday, January 17, 2023

ShortTalk

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் வெற்றிடங்களை எப்போது நிரப்பப்படும்? - கல்வி அமைச்சர் பதில்!


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலை ஆசிரியர்களின் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம். பி தமது கேள்வியின் போது,

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கள மொழி மூல பாடசாலைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் கணிம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாரியளவில் வெற்றிடமாகி இருந்து வருகின்றது. 

குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான குறைபாடு நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனால் பெருமளவு மாணவர்கள் உயர்தரத்தில் கலைத் துறையையே தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

அது தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 8.000 ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்பதாக எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் அந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த வருடத்தில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது.

அதற்கிணங்க மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள்  மற்றும் மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பல வருடங்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதை நாம் அறிவோம்.

அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். 

அந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் களுத்துறை மாவட்டம் மட்டுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »