Our Feeds


Tuesday, January 3, 2023

ShortTalk

கஞ்சிப்பானை இம்ரான் தப்பிச் சென்றமை குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது - அமைச்சரவை பேச்சாளர் பந்துல



(எம்.மனோசித்ரா)


பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏதுவும் தெரியாது.

இந்திய புலனாய்வு பிரிவு இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், இவ்விடயத்தில் இலங்கை புலனாய்வு பிரிவினர் பின்னடைவாக செயற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கஞ்சிபானை இம்ரான் தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், புலனாய்வு பிரிவு ஊடகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (2) இடம்பெற்ற போது , 'கஞ்சிப்பானை இம்ரான்' எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பிணையில் விடுதலையாக முன்னரே , அவர் தலைமன்னார் ஊடாக இந்தியாவின் ராமநாத புரத்திற்கு செல்லவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு புலனாய்வு தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கை புலனாய்வு பிரிவு இது தொடர்பில் எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடாத நிலையில் , இந்திய புலனாய்வு பிரிவின் அறிவிப்பிற்கு அமைய கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி அவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பில் எமது புலனாய்வு பிரிவு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமைக்கான காரணம் யாது?' என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கஞ்சிபானை இம்ரான் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.

அது தொடர்பில் நாம் அறிந்திருக்கவுமில்லை. இது குறித்து எமது புலனாய்வு பிரிவினர் ஏன் அறிந்திருக்கவில்லை என்பதை அந்த பிரிவிடமே கேட்க வேண்டும். எனவே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் இதற்கான பதில் வழங்கப்படும்.

இவ்விடயத்தில் எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்களை வெளியிட வரையிலும் , எமது புலனாய்வு பிரிவினர் செயற்பாடுகள் தொடர்பில் சில சிக்கல்கள் காணப்பட்டன. அவர்களை அதனை படிப்படியாக சரி செய்து கொண்டிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது என்றார்.

பிரபல பாதாள உலகத் தலைவனாக அடையாளப்படுத்தப்படும் கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் , கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி தன் மீது தொடுக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் தற்போது அவர் பயணத்தடையையும் மீறி நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »