Our Feeds


Wednesday, February 22, 2023

ShortNews Admin

ஆப்கான் மத்திய வங்கியின் பணத்தை செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியாது: அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு சொந்தமான 3.5 பில்லியன் டொலர் பணத்தை 2001 செப்டெம்பர் 11 தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கைப்பற்ற முடியாது என அமெரிக்க நீதிமன்றமொன்று செவ்வாய்க்கிழமை  தீர்ப்பளித்துள்ளது.


நியூ யோர்க்கிலுள்ள சமஷ்டி மத்திய (ரிசேவ்) வங்கியில் இப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் பிரவேசித்த தினத்திலிருந்து இப்பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணம் செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடும் என ஜனாதிபதி ஜோ பைடன் பின்னர் கூறியிருந்தார்.

 ஏற்கெனவே தலிபான்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருந்த, செப்டெம்பர் 11 தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்குரிய பணத்திலிருந்து தமக்கான இழப்பீடுகளை வழங்குமாறு கோரி நியூ யோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோர்ஸ் டேனியல்ஸ், ஆப்கான் மத்திய வங்கியின் பணத்தை செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க உத்தரவிட முடியாது என நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களின் குடும்பவங்களுக்கான இழப்பீடுகளை தலிபான்களே வழங்க வேண்டும், முன்னாள் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசோ அதன் மக்களோ அல்ல என வும் அவர் கூறியுள்ளார். 

இப்பணத்தை மேற்படி குடும்பவங்களுக்கு வழங்க உத்தரவிடுவது ஆப்கானிஸ்தானின் சட்டவூர்வமான அரசாங்கமாக தலிபான்களை அங்கீகரிப்பதாகவும் அமையும் என்பதால், அரசியலமைப்பின்படி அதற்கு தன்னால் உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி டேனியல்ஸ் கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து,  ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியது.

இப்பணத்தின் அரைப்பகுதி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கும் மிகுதி அரைப்பகுதி செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக 2022 பெப்ரவரியில் ஜனாதிபதி பைடன் அறிவித்திருந்தார். 

எனினும், மேற்படி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மேன்முறையீடு தோல்வியுற்றால் 3.5 பில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடக்கும் என்பது தெளிவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »