உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (28) தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளதன் காரணமாக இவ்வாறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் 17ஆவது பிரதிவாதி கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, குறித்த பிரதிவாதி உயிரிழந்துள்ளதால் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பின்னர் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்தது.
இதையடுத்து, விசாரணையை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நௌபர் மௌலவி, சஜீத் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, அலியாஸ் மாமா, மொஹமட் சனாஸ் தீன், மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சதி மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி செய்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
