Our Feeds


Saturday, February 18, 2023

ShortNews Admin

50 மில்லியனையேனும் வழங்கினால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிட முடியும் - அரச அச்சகத்தின் தலைவர்



(எம்.மனோசித்ரா)


ரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 மில்லியன் ரூபாவேனும் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட தினத்திலிருந்து 5 நாட்களுக்குள் வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்க முடியும். 

சுற்று நிரூபத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை என்பவற்றின் காரணமாகவே வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் தாமதமடைந்துள்ளதாக அரச அச்சகத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்கு 401.5 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுவிடம் 50 சதவீதம் முற்பணம் கோரப்பட்டது. எவ்வாறிருப்பினும், அதில் 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றது.

இந்நிலையில் அரச நிறுவனங்கள் எவையும் கடனில் சேவை வழங்கக்கூடாது என சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது. அதற்கமைய தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்கான நிதி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 13ஆம் திகதி நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு இதுவரையில் பதில் கிடைக்கப் பெறவில்லை.

எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளை தாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக அவை எம்மால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், இதற்கான பாதுகாப்பினை வழங்குமாறு கடந்த 14ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலின் போதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பின்றி வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டதில்லை. ஆனால், தற்போது வெறுமனே 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால், இன்றுடன் அச்சு நடவடிக்கைகளை முழுமையாக நிறைவடையச் செய்திருக்க முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 18 மில்லியன் வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியுள்ளது. 

இதில் 3 சதவீதம் தபால் மூல வாக்களிப்புக்கானவை ஆகும். வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 மில்லியன் ரூபாவேனும் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட தினத்திலிருந்து 5 நாட்களுக்குள் வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு முழுமையாக ஒட்டுமொத்த வாக்குச் சீட்டுக்களையும் அச்சிடுவதற்கு 20 - 25 நாட்கள் தேவையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் காலத்தில் அரச அச்சகத்தின் செயற்பாடுகள் கால தாமதமானது கிடையாது. 

எனினும், இம்முறை சுற்று நிரூபத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் உரிய பாதுகாப்பு கிடைக்கப் பெறாமையால் இந்த நடவடிக்கைகள் கால தாமதமடைந்துள்ளமை கவலைக்குரியது. 

மேலும், இது தொடர்பில் எனக்கு வேறு எந்த வகையிலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »