Our Feeds


Tuesday, February 14, 2023

News Editor

நியூசிலாந்தை தாக்கியது சக்திவாய்ந்த புயல்


 நாடு முழுவதும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கேப்ரியல் சூறாவளி ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசாங்கம் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. 


நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 


நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு பேய் மழை கொட்டித்தீர்த்தது. 


இதில் அந்த நகரம் வெள்ளக்காடாக மாறியது. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் பலியாகினர். மேலும் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருள் சேதம் ஏற்பட்டது. 


பயங்கர புயல் தாக்கியது இந்த நிலையில் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து ஆக்லாந்து நகரம் முழுமையாக மீளாத நிலையில் நேற்று நியூசிலாந்தின் வடக்கு பிராந்தியங்களை 'கேப்ரியல்' என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. 


இந்த பயங்கர புயல் அங்கு ஆக்லாந்து உள்பட 5 பிராந்தியங்களை புரட்டிப்போட்டு விட்டது. மணிக்கு பல மைல் வேகத்தில் சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.


தொடர்ந்து, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 


குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 


புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மோசமான வானிலை சீரமைப்பு பணிகளை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளதால், மின் இணைப்பை மீண்டும் கொண்டுவர பல நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 


இதனிடையே புயல், மழை காரணமாக வடக்கு பிராந்தியங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்பு பணிகள் தீவிரம் புயல் காற்றுடன் கூடிய கனமழைக்கு மேலும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 


நாடு முழுவதும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கேப்ரியல் சூறாவளி ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசாங்கம் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. புயல், மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »