Our Feeds


Wednesday, February 1, 2023

ShortNews Admin

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் - நௌபர் மௌலவி உள்ளிட்டவர்களுக்கு எதிரான விசாரணைக்கு திகதி குறிப்பு



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தமித் தொடவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


சட்டமா அதிபரிடம் இருந்து வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.


நௌபர் மவ்லவி, சஜீத் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை, அலியஸ் கௌபர் மாமா, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சதி மற்றும் ஆதரவளித்தல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »