Our Feeds


Monday, February 27, 2023

ShortTalk

கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா துணை நிற்கும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்



அமெரிக்கா இலங்கையின் பங்காளராக இருப்பதுடன் இக்கடினமான காலத்தைக் கடந்து செல்கையில் இலங்கையுடன் அது நிற்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலீ ஜே. சங் தெரிவித்தார்.


“இந்தோ-பசிபிக்கிற்கான ஒரு பகிரப்பட்ட பார்வை: தெற்காசியாவிற்கான தாக்கங்கள்” எனும் தலைப்புடைய ஒரு புத்தகத்தினை வெளியிடுவதற்கும் செழிப்பு, ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய தொலைநோக்குகளுக்கு அமெரிக்க இந்தோ-பசிபிக் மூலோபாயம் எவ்வாறு உதவிசெய்கிறது என்பது உட்பட, அதன் ஓராண்டு நிறைவில் அந்த மூலோபாயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குமான ஒரு நிகழ்வை அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நடத்தியது. 

இந்த மூலோபாயம் தொடர்பான பிராந்திய ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க நிபுணர்களின் பல்வேறு கண்ணோட்டங்களை வழங்கும் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை இந்த பதிப்பு உள்ளடக்கியுள்ளது. 

நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தூதுவர் ஜுலீ ஜே. சங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை 2023 ஆம் ஆண்டு குறிப்பதை எடுத்துக்கூறினார்.

“எமது இரு நாடுகளுக்கிடையிலான உறவானது பரந்தது மற்றும் ஆழமானது. அதன் மையத்தில் இருப்பது மக்களுக்கான, முன்னேற்றத்திற்கான மற்றும் பங்காண்மைக்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பாகும்.” எனவும் குறிப்பிட்டார். 

இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் அடிப்படையான கூறுகள் “சுதந்திரமான மற்றும் திறந்த, செழிப்பான, இணைக்கப்பட்ட, மீள்தன்மையுடைய மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கினை” உள்ளடக்கியதாகும் என தூதுவர் மேலும் கூறினார். 

“இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை நாம் கருத்தில் கொள்ளும்போது, செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவது முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும். இதை இன்னும் தெளிவாகக் கூறவிரும்புகிறேன்: அமெரிக்கா இலங்கையின் பங்காளராக இருப்பதுடன் இக்கடினமான காலத்தைக் கடந்து செல்கையில் இலங்கையுடன் அது நிற்கிறது.” எனவும் தூதுவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்று உரைநிகழ்த்திய ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் “அமெரிக்க-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது. இதுபோன்ற நினைவில் நிற்கும் ஒரு தருணத்தில் இந்த மதிப்புமிக்க பதிப்பினை அமெரிக்கத் தூதரகமும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட முடிந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.” எனக் குறிப்பிட்டார். 

பாதுகாப்புக் கற்கைகளுக்கான டேனியல் கே. இனோயே ஆசியா-பசிபிக் மத்திய நிலையத்தின் பணிப்பாளரான, அமெரிக்க கடற்படையின் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) பீட்டர் ஏ. குமாடாஒடாவோ தனது சிறப்புரையில்,  “சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயற்பாடுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான எமது திறன் ஆபத்தில் இருக்கிறது. 

போட்டித்தன்மை காணப்படுவது  நல்லதெனினும் விதிகள் மாற்றப்படும்போது, அந்த செயல்முறை வெளிப்படையானதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் இருத்தல் அவசியம். பல தசாப்தங்களாக அமைதி, செழிப்பு மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எம்மனைவருக்கும் வழங்கிய தற்போது காணப்படும் கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, [அமெரிக்கா மற்றும் எமது நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்கள்] அனைவரும் ஒரே எண்ணம் கொண்ட ஒரு நாடுகளின் குழுவாக ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.” எனக் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் 100இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »