Our Feeds


Thursday, February 16, 2023

ShortTalk

புற்றுநோய் மருத்துவமனையில் மருந்து திருடியவர் கைது - நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு



மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி, புற்றுநோயாளிகளுக்கு விற்பனை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட மருந்தொன்றை திருடி புற்று நோயாளர்களுக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (16) உத்தரவிட்டார்.


குறித்த சந்தேக நபர் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு இங்கு மருந்து பற்றாக்குறை உள்ளதாக கூறி 22,000 ரூபாவிற்கு மருந்தை விற்பனை செய்ய சம்மதித்து பின்னர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து, சந்தேகநபரின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்ட போது, 425,970 ரூபா பணம் மற்றும் அதே வகை மருந்து தொகையொன்று இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், நன்கொடையாளர்கள் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கும் மருந்துகளுக்கு குறித்த இலச்சினை பயன்படுத்தப்படுவதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது வாடிக்கையாளர் மருந்தாளராக பணிபுரிவதால், அவர் தனது வீட்டில் நடத்தும் மருந்தகத்திற்கு இந்த மருந்துகளை வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபருக்கு மருந்தாளராக பணிபுரிவது தொடர்பான உரிமம் எதுவும் இல்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.


சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »