Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

சீனி இறக்குமதியில் திருடப்பட்ட பணத்தை மீட்டெடுத்திருந்தாலே வைத்திய சேவைகளை பல மாதங்களுக்கு வழங்க முடியும் - NFGG ஜனாதிபதிக்கு காட்டமான கடிதம்!

 

Eng. அப்துர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்!

" மக்களுக்கு  வைத்திய சேவை  வழங்கும் தனது அடிப்படை கடமையிலிருந்துபொறுப்புள்ள எந்தவொரு அரசாங்கமும் ஒரு போதும் நழுவ முடியாது. சீனி இறக்குமதியில் திருடப்பட்ட பணத்தை மீட்டெடுத்திருந்தாலே வைத்திய சேவைகளை பல மாதங்களுக்கு கிரமமாக வழங்க முடியும்"
- Eng.அப்துரா ரஹ்மான் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிப்பு!

நிதிப் பற்றாக்குறை காரணமாக அவசியமில்லாத சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு  சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை தொடர்பாக பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 

அதன் தமிழாக்கம்  கீழே தரப்படுகிறது.


ஜனாதிபதி அவர்களுக்கு!


 நேற்று காலையில் நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட ஒரு செய்தி இந்த கடிதத்தை உங்களுக்கு அவசரமாக எழுத என்னைத் தூண்டியது.

 "அத்தியவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திர சிகிச்சைகள்" அனைத்தையும் ஒத்தி வைக்குமாறு சுகாதார அமைச்சு அரச வைத்தியசாலைகளுக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. இது மிக அதிர்ச்சியான ஒரு விடயமாகும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள எவராலும் இதனை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்க வைத்தியசாலைகளை நாடும் எவரும் அனாவசியமாக அதனை நாடுவதில்லை. தங்களுக்கு மருத்துவ தேவை இருந்தால் மட்டுமே வைத்தியசாலைகளை அணுகுகிறார்கள். மேலும், சத்திர சிகிச்சைகளை யாரும் கண்டிப்பான காரணங்கள் எதுவுமின்றி மேற்கொள்வதும் இல்லை. சத்திர சிகிச்சைகள் அவசியம் என்பதை நீண்ட பரிசோதனைகளுக்கு பிறகு வைத்தியர்களே முடிவு செய்கிறார்கள்.  அப்படி இருக்க "அத்தியவசியம் இல்லை; அல்லது அவசரம் இல்லை" என்று எந்த ஒரு சத்திர சிகிச்சையினையும் அவ்வாறு 'இலகுவாக வரையறை' செய்ய முடியாது.

மேலும், தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறக்கூடிய பொருளாதார பலம் உள்ள எவரும் பெரும்பாலும் அரசாங்க  வைத்தியசாலைகளை நாடுவதும் இல்லை. எனவே,  இந்த முடிவினால் பாதிக்கப்பட போவது இந்த நாட்டின் அரசாங்க வைத்திய சேவைகளை நம்பி இருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெரும்பான்மையான  மக்களே ஆகும்.  

பொறுப்புள்ள எந்த ஒரு அரசாங்கமும் மக்களுக்கு வழங்க வேண்டிய வைத்திய சேவை  வழங்கும் பொறுப்பிலிருந்து ஒரு போதும் நழுவ முடியாது. அரசியலில் பன்னெடுங்கால நீண்ட அனுபவம் உள்ள உங்களுக்கு இதனை நான் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 ஆனால் ஒரு விடயத்தை உங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகம் ஊட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

 அதாவது 'கோத்தாபே" தலைமையிலான அரசாங்கம் செய்யத் தவறிய அடிப்படைக் கடமைகளை ,மக்களுக்கு வழங்க தவறிய அடிப்படை சேவைகளை அவசரமாக வழங்குவேன் என்ற வாக்குறுதியுடனேயே நீங்கள் இந்த ஜனாதிபதி பதவியினை பாரம் எடுத்தீர்கள். 

இந்தப் பதவியை பொறுப்பெடுத்து இப்போது ஆறு மாதங்களும் முடிந்து விட்டன. இதுவரை பெரும்பாலான அடிப்படை விடயங்களை நீங்கள் நிவர்த்தி செய்திருக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்லும் படியாக எதுவும் இதுவரை நடக்கவில்லை.  'செலுத்த வேண்டிய கடன் தொகைகளை செலுத்தவில்லை' என்பதன் காரணமாக எஞ்சுகின்ற  பணத்தைக் கொண்டு எரிபொருள் போன்ற விடயங்களை ஓரளவு உங்களால் வழங்க முடிந்திருக்கிறது. 

 அரசாங்க வைத்திய சேவைகளை பொறுத்தளவில் உரிய மருந்துகள் உரிய நேரத்துக்கு கிடைக்காததனாலும் சத்திர சிகிச்சை போன்ற விடயங்கள் உரிய நேரத்தில் நடக்காததன் காரணமாகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், எந்தக் காரணத்தின் அடிப்படையிலும்  கைவிடக் கூடாத, குடிமக்களின் அடிப்படை உரிமையான மருத்துவ சேவைகளில்  மீண்டும் மீண்டும் "கை வைப்பதாகவே" சுகாதார அமைச்சின் பணிப்புரை அமைந்துள்ளது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 


நீங்கள் உண்மையிலேயே
நாட்டு நலனில் அக்கறை கொண்டிருந்தால் "கை வைத்திருக்க" வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அரசாங்கத்தின் உதவியுடன் கம்பெனிகளாலும் மற்றும் அரசியல்வாதிகளாலும் திருடப்பட்ட பாரிய தொகைகளை மீட்டெடுத்தல்; அரச நிறுவனங்களில் நடக்கும்
தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களும், ஊழல் மோசடிகளும், வீண் விரயங்களும்; அமைச்சர்களின் அரசியல்வாதிகளின் ஆடம்பர செலவுகளும் மோசடிகளும்...என நீங்கள் கை வைத்திருக்க வேண்டிய பட்டியல் நீண்டு செல்கிறது. 

சீனி இறக்குமதி மோசடியில் திருடப்பட்ட மக்கள் பணத்தை மட்டும் மீட்டெடுத்திருந்தாலே மக்களுக்கான வைத்திய சேவைகளை பல மாதங்களுக்கு கிரமமாக வழங்க முடியும். இதனைக் கூட இதுவரை உங்களால் செய்ய முடியவில்லை.

அதுவெல்லாம் செய்யாத உங்கள் தலைமையிலான அரசாங்கம் இப்போது மக்களின் அடிப்படை வைத்திய உரிமையில் மீண்டும் கை வைப்பதனை மனசாட்சி உள்ள எவராலும் அனுமதிக்க முடியாது.

 நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த முடிவினை எடுத்திருப்பதனை நியாயப்படுத்த விளைகின்ற நீங்கள், நாடு மிக இக்கட்டான பொருளாதார நிலைமையில் உள்ள போது கோடிக்கணக்கான மக்கள் பணத்தினை வீண்விரயம் செய்து,மக்களின் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாடி முடித்திருக்கின்றீர்கள். சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாடுவதை விடவும் மக்களுடைய உயிர்களை பாதுகாப்பதே உண்மையான ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் நீங்கள் ஆற்ற வேண்டிய முதற்கடமையாகும்.

 இந்த இடத்தில் நாட்டில் கையிருப்பில் உள்ள பொருளாதார வளத்தினை கருத்தில் கொண்டு முதலில் அத்தியாவசியமான தேவைகள் எவை? அத்தியாவசியமற்ற தேவைகள் எவை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


எனவே சுகாதார அமைச்சின் இந்த மக்கள் விரோத முடிவை நிறுத்துவதற்கு நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச வைத்தியசாலைகளின் சகல வைத்திய சேவைகளையும் தொய்வின்றி வழங்குவதற்கான  நிதிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

 இதற்கு அவசியமான நிதிகளை மாற்று வழிகளில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதனை செய்வதானது அரசாங்கத்தின் முன்னுரிமை கடமையாகும் என்பதனை சகல அதிகாரிகள் மற்றும் தரப்பினர்களுக்கு வலியுறுத்திக் கூறி மக்களின் வைத்திய உரிமையை நீங்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். 

இது தொடர்பில் உங்களின் உடனடி கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

Eng. அப்துர் ரஹ்மான்
பிரதித் தவிசாளர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »