சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு, தம்மை கொலை செய்யும் நோக்கமே இருந்தாகவும் விஜய வீர மற்றும் விஜேய குமாரதுங்க ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமையே தமக்கும் ஏற்படும் என காவல்துறை அதிகாரியொருவர் தம்மை எச்சரித்ததாகவும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.
தம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், நீதிக்கு புறம்பாக தடுத்துவைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வாகனத்தில் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 167 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே நேற்று முன்தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.