Our Feeds


Sunday, March 12, 2023

ShortTalk

ஆராய்ச்சி கற்கைக்காக இலங்கை வந்த ஜப்பான் மாணவி 218 மாணவர்களுக்கு செய்த பெரும் உதவி - நாடு கடந்த மனிதநேயப் பணி!



உரையாடல்: சி.சிவகுமாரன்

ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கற்கைகள் துறையின் கலாநிதி பட்ட ஆய்வாளர் கனக்கா ஷிமிசு, நுவரெலியா மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 218  மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஜப்பான் மக்களின்   51 இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிகள் கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார். 

கனக்கா ஷிமிசு, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கற்கைகள் துறையின் கலாநிதி பட்ட ஆய்வாளராவார். 

இவரது ஆய்வுத் தலைப்பு நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை முறையாகும். பிரதானமாக குருணாகலை மற்றும் குளியாப்பிட்டி வாழ் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்த இவரது ஆய்வு கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலும் தொடர்ந்தது. 

நுவரெலியா மாவட்டத்துக்கு வருகை தந்த இவர் இங்குள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை நேரடியாக அவதானித்து இச்சமூகத்தின் மாணவர்களுக்கு கல்வி ரீதியான உதவிகளை செய்வதற்கு தீர்மானித்தார்.


அதன் படி ஜப்பான் வாழ் நன்கொடையாளர்கள் மற்றும் ஏனையோரின் உதவியுடன் சுமார் ஐம்பது இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 218 மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.  ஆராய்ச்சி கற்கைகளுக்காக வருகை தந்த இவர் எவ்வாறு பெருந்தோட்ட சமூகத்துக்கு உதவும் திட்டத்தை ஆரம்பித்தார் என்பது முக்கியமான விடயம். சரளமாக சிங்கள மொழி பேசும் இவர் இது குறித்து எம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன. 

இலங்கை எனக்கு பிடித்த நாடு

‘நான் 2014 ஆம் ஆண்டில் முதற் தடவையாக இலங்கைக்கு வருகை தந்தேன். ஆறு தடவைகள் இங்கு வந்திருக்கிறேன். இந்த மக்களின் கலை ,கலாசார பண்புகள் , உணவு பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

2018 ஆம் ஆண்டு நான் கற்கும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவுக்கு இலங்கையின் பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் விரிவுரைக்காக வருகை தந்திருந்தார். அவர் இலங்கை மக்களின் பெருந்தோட்ட சமூகத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினார். அது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எனவே எனது ஆராய்ச்சி பட்டத்துக்காக இலங்கை வருகை தரும் போது அந்த சமூகத்துக்கு ஏதாவதொரு வழியில் உதவ வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். 

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு  இலங்கை மிகவும் மோசமான பொருளாதார பாதிப்புக்குட்பட்டது என்பதை  நாம் அறிந்தோம். 2021 ஆம் ஆண்டு இங்கு வருகை தந்த போது பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள், இந்த பொருளாதார நெருக்கடியினால் பெருந்தோட்டத்துறை கல்வி சமூகம் முற்றாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

மேலும் தனது குடும்பத்தினருடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘சுப்பையா செல்லம் நினைவு கல்வி அறக்கட்டளை’ யின் ஊடாக இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே நானும் எமது நாட்டின் நன்கொடையாளர்களிடம் இந்த சமூகத்துக்கு உதவிகளை செய்வதற்கு தீர்மானித்தேன்.

அதன் படி  ஜப்பானில்  இயங்கி வரும் "READYFOR"  என்ற   நன்கொடை நிதி திரட்டும் இணைய பக்கத்தில் இணைந்து இச்சமூகத்துக்கான உதவிகளைப் பெறுவதற்கு கோரிக்கை முன்வைத்தேன். இத்திட்டத்துக்கு பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் வழிகாட்டியாக இருந்தார். 2022 ஜுலை மாதம் 7 ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம்  22 ஆம் திகதி வரை 191 நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது. மொத்தமாக 2,409,200 ஜப்பானிய யென்கள் கிடைத்தன.

இதன் இலங்கை பெறுமதி கிட்டத்தட்ட 58 இலட்சம் ரூபாயாகும். நன்கொடை வசூலிக்க உதவியாகவிருந்த "READYFOR"  இணையத்தளத்தின் கட்டணம் போக மிகுதியாக 2,011,683 ஜப்பானிய யென்கள் (இலங்கை பெறுமதியில் கிட்டத்தட்ட 51 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய்) இலங்கையின் சுப்பையா செல்லம் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டது.  

இத்தொகையின் மூலம் பெருந்தோட்டப்பகுதிகளில் இயங்கி வரும் மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயம்,  ஹரிங்டன்  மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்று வரும் வசதி குறைந்த சுமார் 218 மாணவர்கள் அப்பாடசாலை அதிபர்களினூடாக அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களுக்கான சீருடைகளிலிருந்து காலணிகள், காலுறைகள் , கற்றல் உபகரணங்கள், நோட்டு புத்தகங்கள், அவர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கொண்ட பொதிகள் என்பன வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இந்த உதவிகளை பெறுவதற்கு ஜப்பானிய மக்களுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களும் உதவிகளை நல்கியிருந்தார்கள். இந்த 191 நல்லிதயம் படைத்தவர்களின் பெயர்கள் குறித்த இணையத்தளத்தில் இருக்கின்றன.

இவ்வாறு தான் எனது உதவி அமைந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளை செய்ய ஆர்வமாக இருக்கிறேன். இந்த சமூகத்துக்கு கல்வி அறிவை ஊட்டுவதற்கு அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாக இருக்கின்றது. 

பல மாணவச் செல்வங்களை சந்தித்தேன். மிகவும் திறமை படைத்தவர்களாக உள்ளனர். சரியான ஆலோசனை, வழிகாட்டல், வளங்கள் கிடைத்தால் இச்சமூகம் மேம்படும். இந்த உதவிகள் வழங்கும் திட்டத்தில் என்னோடு ஒத்துழைப்பு நல்கி இச்சமூக மாணவர்களின் கல்வி உயர்ச்சி ஒன்றையே நினைத்து சேவையாற்றும் எனது பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆராய்ச்சி பணிகள்

குருணாகல் மற்றும் குளியாப்பிட்டி வாழ் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களைப் பற்றி எனது ஆராய்ச்சி இருந்தாலும் நான் கண்டி மகியாவ மற்றும் கொழும்பு நகர்ப்பகுதிகளிலும் கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன்.

நகர சுத்திகரிப்பு தொழிலாளர்கள் என்போர் மாதச் சம்பளம் பெற்று வரும் ஊழியர்கள் என்றாலும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற அமைப்புகளோ ஆராய்வதில்லை. நிவாரணங்களை வழங்கி விட்டு செல்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. 

இவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அறிவை ஊட்ட வேண்டும். நகரப்பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும் இவர்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. ஜப்பானில்  நாங்கள் இத்தொழில் செவ்வோரை சுத்தப்படுத்தல் சேவையாளர்கள் என்றே அழைப்போம். அங்கு தனியார் நிறுவனங்கள் இவர்களை முகாமைத்துவம் செய்கின்றன. 

அதே போன்று பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் நகரங்களிலிருந்து தூரத்தில் வசித்து வந்தாலும் ஒரு கட்டுக்கோப்பு காணப்படுகின்றது. இந்த சமூகத்தின் இளைஞர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் பாடசாலைகள் காணப்படுவதால் மாணவர்கள் கற்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் சில வளப்பற்றாக்குறைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

கனக்கா ஷிமிசு போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஏதோ தமது ஆராய்ச்சி நோக்கத்துக்காக ஒரு நாட்டுக்கு வந்தோம் சென்றோம் என்றில்லாமல் இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகளிலும் இணைந்திருப்பது பாராட்டத்தக்கதொன்று. இது ஏனையோரையும் இவ்வாறான சமூக சேவை பணிகளில் ஈடுபடச் செய்வதற்கான உந்து சக்தியாகவும் உள்ளது எனலாம்.

ஜப்பான் மக்கள் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பது முக்கிய விடயம். அதை  கனக்கா ஷிமிசு  இலங்கை மக்களுக்கு உணர்த்தி சென்றிருக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »