இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிதுறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகின்றது. இந்த மக்கள் போராட்டம் 11வது வாரமாகத் தொடர்ந்து வருகின்றது.
அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சட்டம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நீதித்துறைக்கே அச்சுறுத்தலாக அமையும் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன