இலங்கையில் சமூக-பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்புக்கு வழங்கியது.
இந்த நிதியானது, "நெருக்கடியில் உள்ள பெண்களை வலுவூட்டல்" என்ற புதிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியென்பதுடன், இது பெப்ரவரி 2023 முதல் டிசெம்பர் 2023 வரை செயற்படும் என்றும் இது பாலின மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்ட குறைந்தது 1,200 பெண்கள் உட்பட அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ள 500 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கும், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தில் உள்ள 2,000 நபர்களுக்கும் மேலும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தற்போதுள்ள நெருக்கடிக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பதிலளிப்பு மற்றும் மீட்பு முயற்சிகளில் பின்தள்ளிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன் இந்த நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் இலக்காகும் என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவரானமிசுகோஷி ஹிடேகி வலியுறுத்தினார்.
பாலின மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியான அதிகரிப்பை களமட்டத்திலுள்ள அறிக்கைகள் பிரதிபலிக்கின்ற நிலையில், தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவை பாதுகாப்பான வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் போன்ற அரச சேவைகளை அணுகுவதைத் தடுப்பதுடன், இதன் விளைவாக பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு பேரழிவுகரமான தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த செயற்திட்டத்தின் மூலம், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து அணுகக்கூடிய பாதுகாப்பான வீடுகளை ஐ.நா பெண்கள் அமைப்பினர் வழங்குவார்கள். மேலதிகமாக, இது வசதிகள் மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பான வீடுகள் போதிய நிதி மற்றும் ஆதரவின்மை காரணமாக மூடப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து செயற்படுவதை உறுதி செய்யும்.
இது துஷ்பிரயோக சூழ்நிலையில் இருந்து தப்பிச் செல்லும் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு அதிக பாதுகாப்பான தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
மேலும், சாத்தியமான வேலை வாய்ப்புகளுக்கான அணுலின் பற்றாக்குறையாலும் உணவுப் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், குடும்பங்கள், குறிப்பாக ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் அவர்களின் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உணவு மற்றும் தேவைகளை அணுகுவதை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அம்பாறை, கொழும்பு, மொனராகலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதன் மூலமும் வணிக மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலமும் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுடன் இணைந்து, அவர்களின் வணிக தாங்குதிறன் மற்றும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த இச் செயற்திட்டம் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.