அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே இருந்ததையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டை மீட்டெடுக்க முடியாது என பலரும் நினைத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் கடந்த 7 மாதங்களில் அந்த நிலையை மாற்றி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனது அணியினரால் முடிந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை என்றும் வலியுறுத்தினார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அனைவரும் காண முடியும் எனவும், பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடாக இலங்கையை மாற்ற, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டும் போதாது எனவும், அதற்கு பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
இப்போது எனது நோக்கம் கடனை மறுசீரமைப்பது மட்டுமல்ல, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அடித்தளம் அமைப்பதும் அல்ல, அதன் மூலம் நமது கடனை பத்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த முடியும்.
அடுத்த 40-50 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் வளமான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது நோக்கம். நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கிறது. எனினும் ஏனைய வளமான நாடுகளைப் போன்று மேலதிக உபரியை நாட்டில் உருவாக்குவதே இறுதி இலக்காகும்.
அந்த பெரிய ஆட்டத்திற்கு எனக்கு ஒரு அணி தேவை. என்னுடைய அணி வேறு யாருமில்லை. நீங்கள் அனைவரும் தான். அதற்கான 25 வருட திட்டம் எங்களிடம் உள்ளது. 2048ல் இந்த நாடு வளமான நாடாக மாறும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.