பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக மூன்று வியாபார நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகி விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ பரவலை கட்டுப்படுத்திய போதிலும் மூன்று வியாபார நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகி விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு துறைக்கு தகவல் வழங்கிய போதிலும் இதுவரை நேரமும் தீயணைப்பு வாகனங்கள் ஸ்தலத்திற்கு சமூகம் தரவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்தில் வருகை தராததன் காரணமாக பிரதேச மக்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர்.
மேலும் நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் குறித்த தீ பரவல் ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னரே ஸ்தலத்திற்கு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொட்டக்கலை நகரில் பெட்ரோலிய கூட்டத்தாபணத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு தாங்கிகள் பல இருக்கின்ற போதிலும் கூட அங்கு தீயணைப்பு வாகனங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொலைதூரத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களை கொண்டு வர வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்