தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் செயலாளரூடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உரிய பாதுகாப்புகளை வழங்க முடியும் என தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, தேர்தலுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை மாத்திரம், தேர்தல் தாமதமடையும் காலப்பகுதிக்குள் வழங்குவது பொருத்தமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.