(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான அடிப்படை வேலைத்திடடங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார்.
அதனால் தொழிற்சங்கங்கள் 6 மாதங்களுக்காவது அமைதியாக இருந்தால் நாட்டு மக்களின் எதிர்காலத்தை ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலகில் எந்த நாடாக இருந்தாலும் அது வங்குரோத்து அடைந்தால், 8,10 வருடங்களுக்கு அந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினமான விடயம்.
ஆனால் எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னரே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.
அவர் பொறுப்பேற்று 7,8 மாதங்களில் வங்குராேத்து அடைந்திருந்த இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அடிப்படை விடயங்களை தயார் படுத்தி இருக்கிறார்.
அதனால் நாட்டை கட்டியெழுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி, 6மாதங்களுக்காகவது தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு, அமைதியாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் தொழிற்சங்கங்கள் நாட்டில் போராட்டங்களை மேற்கொள்வதாக இருந்தால், அது நாட்டை மேலும் வங்குராேத்து அடையச்செய்வதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தி, அந்த வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு வீதிக்கி வருபவர்களை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நாட்டை கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு நாடு தள்ளப்படும். அதனால் நாட்டில் எப்பகுதியிலாவது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் இடம்பெறுமாக இருந்தால், அந்த இடங்களில் இருக்கும் பொது மக்கள் வீதிக்கிறங்கி அதனை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு இடமளிக்காமல் தடுக்க வேண்டும்.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் படிக்கும் போது போராட்டம் செய்கின்றனர். அதன் பின்னர் படித்து வெளியேறிய பின்னர் தொழில் இல்லை என போராட்டம் செய்கின்றனர். தொழில் கிடைத்த பின்னர் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார். அவர் நிச்சயமாக நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார். அது தொடர்பில் நம்பிக்கையுன் இருங்கள். தொழிற்சங்கங்கள் போராட்டங்களை கைவிட்டு நாட்டிடை கட்டியெழுப்பும் வேலைத்திடடங்களுக்கு ஜனாதிபதிக்கு ஒதுத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.