Our Feeds


Tuesday, March 7, 2023

ShortTalk

ஹரக் கட்டா - குடு சலிந்து உட்பட 8 பேர் மடகஸ்காரில் கைது! - மேலும் பல தகவல்களும் அம்பலம்



தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன உள்ளிட்ட 8 பேர் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS இணையத்தளம் நேற்று (6) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த 8 பேரும் மடகஸ்காரில் உள்ள இவாட்டோ (Ivato) சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி என்று கூறப்படும் மலகாசியரான பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் அறிக்கையின்படி, கடந்த மார்ச் முதலாம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏனைய ஐந்து பேர் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதியன்று நாட்டின் Nosy Be சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்துள்ளனர் என்றும் அவர்கள் கடந்த மார்ச் முதலாம் திகதி மடகஸ்காரை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட போது, ஹரக் கட்டா தன்னையொரு கோடீஸ்வர தொழிலதிபர் போல் காட்டிக் கொண்டதாகவும், குடு சலிந்து உட்பட ஏனைய குழுவினர் ஹரக் கட்டாவின் மெய்ப்பாதுகாவலராக தோன்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றங்களால் பெறப்பட்ட பிடியாணைகள் மற்றும் காவல்துறை அறிக்கைகளின் பிரகாரம், ஹரக் கட்டா உள்ளிட்ட பாதாள உலக உறுப்பினர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி, ஹரக் கட்டா மட்டும் மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகளின் மூலம் குடு சலிந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா மற்றும் பலர் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து இரண்டு சொகுசு மகிழூந்துகளில் இவாடோ விமான நிலையத்திற்கு பிரவேசித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹரக் கட்டாவின் மனைவியென கூறப்படும் பெண்ணிடமிருந்து அந்நாட்டின் நாணய பெறுமதியிலான 38 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

துபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலைதீவு மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் ஹரக் கட்டா போதைப்பொருள் விநியோகம் செய்வதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹரக் கட்டா உள்ளிட்டோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் வலையமைப்பில் மேலும் சிலரும் உள்ளதாக இலங்கையில் உள்ள உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த கைது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச காவல்துறை பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக தகவல் கிடைக்கவில்லையென அறியமுடிகிறது.

உண்மைகளை உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்த நாட்டுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தி சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படலாம் என்றும், அவர்களை அழைத்துவரலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன், சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி துபாய் காவல்துறையால் ஹரக் கட்டா கைது செய்யப்பட்டார். அப்போதும் குடு சலிந்து உடன் இருந்ததுடன் அவர்களிடம் போலி கடவுச்சீட்டும் இருந்துள்ளது.

அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால், கடந்த அக்டோபர் 3ஆம் திகதி துபாய் காவல்துறையினரால் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »