இரண்டு பாரிய நில அதிர்வை சந்தித்த துருக்கியின் தென் பகுதியை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பலியாகினர்.
இந்தநிலையில் இஸ்தான்புல் நகரை சேர்ந்த எஞ்சியுள்ள ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் மற்றுமொரு அபாயத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்குள்ள பாதிக்கப்பட்ட கட்டடங்கள் நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்த கட்டடங்களில் தொடர்ந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூகோளத்தில் நில அதிர்வு ஏற்படக்கூடிய மத்திய ரேகைக்கு மிக அண்மையில் துருக்கியுள்ளதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
மிக உயரமாக உள்ள பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் முற்றாக இடிந்து விழுந்து விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நகரத்தின் 70 சதவீதமான கட்டடங்களின் இடிபாடுகள் மட்டுமே மிகுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் நிபுணர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடுத்து அந்த நகரத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடுவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியேறியதன் பின்னர் எப்படிப்பட்ட நில அதிர்வு ஏற்பட்டாலும் அதனை தாங்கக்கூடிய சக்திவாய்ந்த முறையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தற்போதைய நில அதிர்வுகள் ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட புவியியல் தொடர்பான விசேட ஆய்வின் போது, துருக்கியில் பாரிய நில அதிர்வு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
அப்படியான நில அதிர்வு ஏற்படும் பட்சத்தில் 90 ஆயிரம் உயிர்கள் காவுகொள்வதற்கான ஏதுநிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
அந்த எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பெரிய அளவில் அவதானம் செலுத்தவில்லை என தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது, நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்னர் எச்சரிக்கையினை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை வழங்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இது குறித்தும் மக்கள் பெரிய அளவில் அவதானம் செலுத்தவில்லை என நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.