Our Feeds


Wednesday, March 8, 2023

ShortTalk

உண்மையில், ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதா?



எஸ் . சேகர்


அண்மைய சில நாள்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள், இதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.


பொருளியலைப் பொறுத்தமட்டில், ஏதேனும் ஒரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை அல்லது பெறுமதி உயர்வடைகின்றதாயின், அதற்கு காணப்படும் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும்; அல்லது, அதன் விநியோகம் குறைவடைய வேண்டும்.

இது சாதாரணமாக பாடசாலைக் கல்வியில் பொருளியல் பாடத்தில் கற்றுக் கொண்ட அடிப்படை விடயமாகும். இலங்கை சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவது என்பதில், எம் நாட்டில் காணப்படும் அமெரிக்க டொலரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும் அல்லது அமெரிக்க டொலருக்கு காணப்படும் கேள்வி குறைவடைந்திருக்க வேண்டும்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நாட்டில் பல்வேறு விதமான இறக்குமதி கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் தவிர்ந்த, ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் காணப்படும் வியாபாரங்களில் சுமார் 55 சதவீதமானவை சிறிய, நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களாக காணப்படுவதுடன், அவற்றில் சுமார் 90 சதவீதமான வியாபாரங்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த வியாபாரங்களிடம் அந்நியச் செலாவணி அதாவது டொலர் காணப்பட்ட போதிலும், அவற்றை இறக்குமதி செய்து கொள்ள முடியாததன் காரணமாக, கேள்வி குறைவடைந்துள்ளது.

உண்மையில் இந்த அமெரிக்க டொலர் மதிப்பிறக்கத்துக்கு பிரதான காரணமாக, உலக வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC), இலங்கையின் மூன்று தனியார் வங்கிகளுக்கு மூன்று மாத காலப்பகுதிக்கு நாணய இடைமாற்றத்தை (Currency Swap) மேற்கொள்வதற்கு முன்வந்திருந்தமை அமைந்திருந்தது.

நாட்டுக்கு அவசியமான மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு வசதியளிக்கும் வகையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்றத்தை மேற்கொள்ள முன்வந்திருந்தது.

இதனூடாக, சந்தையில் அமெரிக்க டொலர் வரத்து அதிகரித்துக் காணப்படும் எனும் ஒரு வித எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் அமெரிக்க டொலரில் 25 சதவீதத்தை மத்திய வங்கியில் பேண வேண்டும் எனும் தீர்மானத்திலும் கடந்த வாரம் தளர்வு ஏற்படுத்தப்பட்டு 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

இதனால் வங்கிகளுக்கும் தம்வசம் காணப்படும் அந்நியச் செலாவணியை சந்தையில் வெளியிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது. இவை அனைத்துக்கும் குறுக்கால அடிப்படையில் நிகழும் சம்பவங்களாக அமைந்துள்ளன.

அத்துடன், இவ்வாறு அமெரிக்க டொலரின் மதிப்பு உள்நாட்டு சந்தையில் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானித்து, அவற்றை தம்வசம் அதிகளவில் கொண்டிருக்கும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் உண்டியல் போன்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர், அவற்றை மாற்றும் நடவடிக்கைகளிலும் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனாலும் அமெரிக்க டொலர் உள்நாட்டு சந்தையில் அதிகளவு கிடைக்கும் நிலை எழுந்துள்ளது. இவ்வாறு அமெரிக்க டொலரின் மதிப்பு உள்நாட்டு சந்தையில் வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் வகையில், தாம் அவற்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் அந்நியச் செலாவணியை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால், சந்தையில் இந்த மிகை டொலர் மிதப்பு தொடர்ந்தும் சில காலப்பகுதிக்கு நிலவும் என்பதுடன், இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளில் தற்போது காணப்படும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மீண்டும் 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நிலவியதைப் போல நாடு இயங்க ஆரம்பிக்குமாயின், அல்லது தற்போது காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்க டொலருக்கான கேள்வி அதிகரிக்கும். அச்சந்தர்ப்பத்தில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும்.

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி, அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரம் வலிமையடைந்து வருவதாக சில அரசியல் தரப்பினர் பிரசாரம் செய்வதையும், ஊடகங்கள் சில அறிக்கைகளை இடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவை உண்மையில் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துகளாக அமைந்துள்ளன. தேர்தல் முன்னெடுப்பது தொடர்பில் பல தரப்புகளிடமிருந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் தாம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் வகையில் மேற்கொண்ட செயற்பாடுகளினூடாக இவ்வாறு ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலை தொடர்வதற்கு தற்போது தேர்தல் செலவு அவசியமற்றது போன்றவாறான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் முனைவதைப் போல தோன்றுகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தால் குறிப்பிடுவதைப் போல, இம் மாதத்தினுள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும்பட்சத்தில், இலங்கைக்கு தொடர்ந்தும் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் போன்றவற்றிடமிருந்து இலங்கைக்கு உதவிகள் கிடைக்க தயாராகவுள்ளன. எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில், தற்போது காணப்படும் இந்த ரூபாய் மதிப்பு உயர்வு தொடர்ந்தும் ஒரு மூன்று மாதங்கள் வரை தொடரக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதில், அரசாங்கத்தால் தொடர்ந்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது நிலவுவதைப் போலவே பேணப்படுமா என்பது தாக்கம் செலுத்தும். உதாரணமாக, தற்போது எரிபொருள் QR குறியீடு அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.

இதில் வாராந்தம் வழங்கப்படும் அளவில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அளவிலும் அதிகரிப்பு மேற்கொள்ள நேரிடும். இதனால் அதற்குத் தேவையான அமெரிக்க டொலருக்கான கேள்வி சந்தையில் அதிகரிக்கும்.

இவ்வாறான காரணிகள், மீண்டும் அமெரிக்க டொலர் பெறுமதி உள்நாட்டு சந்தையில் உயர்வடைய காரணமாக அமையும். ஆக, இலங்கை ரூபாயின் மதிப்பு உண்மையில் அதிகரிக்கவில்லை.

சந்தையில் டொலர் புழக்கம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் காரணமாக, அதற்கான கேள்வி குறைந்துள்ளதால் இந்த நிலை எழுந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »