உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு அதனை ஆராய தீர்மானித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.