முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
மத்துகம நீதிமன்றம் பிறப்பித்த வெளிநாட்டுப் பயணத் தடை குறித்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும், மத்துகம நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு மஹிந்தானந்த அளுத்கமகே இன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில்,
தரவுப் பதிவுகளில் ஏற்பட்ட பிழையினால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்த கட்டுப்பாட்டாளர் நாயகம், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் குறித்து திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
இதற்கிடையில், குடிவரவு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளை உரிய விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சருக்கு இன்று வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.